< Back
மாநில செய்திகள்
வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மாநில செய்திகள்

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தினத்தந்தி
|
13 Feb 2024 7:27 PM IST

வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, சட்லஜ் நதியில் விழுந்தது.இதில் கார் டிரைவர் தஞ்ஜின் இறந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காணாமல் போன வெற்றியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சட்லஜ் நதியில் 6 கி.மீ. தொலைவில் பாறைக்கு அடியில் வெற்றியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து நேற்று பகலில் மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இமாசலபிரதேச போலீஸ் துணை கமிஷனர் அமித் ஷர்மா வெளியிட்டார். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரபப்ட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல் அமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

வெற்றி துரைசாமி உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்