< Back
மாநில செய்திகள்
தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Feb 2023 5:51 AM IST

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல்

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார்.

சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்து வாசித்தளித்த பிறகு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அந்த கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வம் இருக்கை

தேர்தல் கமிஷன், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பின்பு சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை குறித்த விவகாரத்தில் முடிவு செய்யப்படுவதாக நான் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், சட்டசபையில் அந்த பிரச்சினை பற்றி பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அது முடிவு பெற்ற விவகாரம்.

எனவே அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் இருக்கைகள் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்து போன விவகாரம் என்பதால் அவர்கள் அதைப் பற்றி இப்போது எதுவும் கேட்கவில்லை, கேட்க மாட்டார்கள்.

சட்டசபையில் ஒரு நாள் அந்த பிரச்சினை பற்றி பேசினார்கள். சிறு சிறு மாற்றங்கள் செய்யும்படி கேட்டனர். அவர்களின் தேவைகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பிரச்சினை பற்றி சட்டசபையில் பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது.

சட்டசபையில் யார்-யார்? எந்த இருக்கையில் அமர வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதால் அதன்படி அனைவரும் உட்காருவார்கள். சட்டசபை எனது ஆளுகைக்கு உட்பட்டது. யார்-யாரை எங்கு அமரச் செய்ய வேண்டும் என்பது எனது உரிமை. அந்த அடிப்படையில்தான் அவர்களுக்கு தகுதியான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உரிமை குழு விசாரணை

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறுமா? என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அந்த கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும்.

கடந்த கூட்டத்தொடரில் சட்டசபை மாடத்தில் இருந்து வீடியோ எடுத்த விவகாரம் ஏற்கனவே அவை உரிமை குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்த குழு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண் பட்ஜெட் எப்போது?

இதுவரை தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளுக்கு மறுநாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் 20-ந் தேதி பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பிறகு மறுநாள் 21-ந் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் ஒரு நாள் விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது. 2 பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 22-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு வருவதால் ஏற்கனவே அந்த தேதி அரசு விடுமுறையாக அமைந்துவிட்டது. இந்த 2 பட்ஜெட்கள் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் மார்ச் 23, 24, 27-ந் தேதிகளில் நடத்தப்பட்டு 27-ந் தேதி நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது.

28-ந் தேதி முன்பண மானியக் கோரிக்கையையும், கடந்த ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானியக் கோரிக்கையையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதோடு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்று சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது இடைவெளிக்கு பிறகு ஏப்ரல் மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்