< Back
மாநில செய்திகள்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 July 2024 10:46 AM GMT

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலை செயலாளர் ஜி.ஆர்.வெங்டேசன், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், இளைஞர் அணி மாநில செயலாளர் மைதிலி, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"3 முறை மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியதுதான் திராவிட மாடல் சாதனை. இது தொழில் முனைவோரை மிகவும் பாதிக்கின்றது. மின்துறையிலே வெளிப்படை தன்மை தேவை. அதன் அடிப்படையிலே, மின்சார தேவையை மக்கள் மீது சுமையில்லாமல் பூர்த்தி செய்யக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழக அரசு மகளிருக்கு ரூ.1,000 கொடுத்துவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி அந்த பணத்தை பறிக்க நினைப்பதுதான் திராவிட மாடலா? தமிழகத்தில் மின்துறையில் உள்ள சீர்கேட்டிற்கும், கடன் சுமைக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றுவது ஏற்ப்புடையதல்ல. மின்கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்.

நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று மின்கட்டண உயர்வை குறைக்க மனு கொடுக்க உள்ளோம். மாதம்தோறும் மின் கணக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி பட்டம் போல் காற்றில் பறக்க விடப்பட்டிருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சட்டம் தனது கடமையை முறையாக செய்யும் என நம்புகிறேன். உண்மை குற்றவாளி வெளிவர வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணைதான் சரியான தீர்வு."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்