திருவள்ளூர்
திருவொற்றியூரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலம்
|சென்னை திருவொற்றியூர்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு இந்த வழித்தடத்தில் நேரடி வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
திருவொற்றியூர்-மணலி இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய் மீது போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.58.64 கோடியில் 530 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 18 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த மேம்பால பணி பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் தாமதமானது. இதனால் மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு போராட்டத்துக்கு பிறகு இந்த மேம்பால பணி துரிதப்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இதையடுத்து இந்த உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க..ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன்சிலர்கள் டாக்டர் கே.கார்த்திக், ராஜேஷ்சேகர் உள்பட அ.தி.மு.க.வினரும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.
மணலி சேக்காடு வியாபாரி சங்கத்தின் சார்பாக 6 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலத்தில் செல்கின்ற வாகனங்கள் பத்திரமாக சென்று வரவேண்டும் என வேண்டி தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் மீது பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.