< Back
மாநில செய்திகள்
திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்

போதிய இடவசதி உள்ள பகுதியில் திருவாரூர் அரசு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம் என்பது அரும்பொருட்களை சேகரித்து, அவற்றை காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்கான உள்ள கட்டிடத்தை குறிக்கும். கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கை பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்படும் அரும்பொருட்களை ஆய்வு நடத்திடவும், நமது வாழ்வியல் சுழலை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவோருக்கு பொழுதுபோக்கு மற்றும் அறிவூட்டும் இடங்களாகவும் உள்ளன.

திருவாரூரில் அருகாட்சியகம் கடந்த 1998-ம் ஆண்டு திறக்கப்பட்டு, அப்போது இடவசதி இல்லாததால் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள சபாபதி மண்டபத்தில் இடம் அளிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

வாத்திய கருவிகள்

இந்த மண்டபத்தில் பாதி இடம் கோவில் அலுவலகம் பயன்பாட்டில் உள்ளது. சுமார் 2500 சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் இயங்கி வருகின்றது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாணயங்கள், வாத்திய கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்ணிற்குள் இருந்து கிடைக்கும் புராதான பொருட்கள், சாமி சிலைகள், படிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முதுமக்கள் தாழி

இதில் குடவாசல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மிகவும் அழுகுடன் வடிவமைக்கப்பட்ட நடராஜர் பார்ப்போரை வியக்க வைக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள பஞ்சமுக வாத்தியம் சோழர் காலத்தில் பல்வேறு கோவில்களில் இசைக்கப்பட்ட கருவியாகும். தற்போதும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது.

கி.மு. 2-ம் நூற்றாண்டில் தமிழர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அதற்குள் வைத்து பூமியில் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த தாழியை முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. இந்த தாழி வலங்கைமான் ஆவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும்போது கிடைத்துள்ளது. இதனை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதுமக்கள் தாழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தர் கற்சிலை

கடந்த 2012-ம் ஆண்டு திருவாரூர் அருகே கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் பள்ளம் தோண்டியபோது புத்தர் கற்சிலை கிடைத்துள்ளது. இந்த கற்சிலை சுமார் 5 அடி உயரமும், ஒரு டன் எடையும் கொண்டது. இதனை அருங்காட்சியகத்திற்குள் வைக்க போதிய இடவசதியின்றி அருங்காட்சியகம் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடாரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் மற்றும் உயிரினங்கள், கற்கருவிகள், தோல் பொருட்கள் ஆகியவை தனித்தனி கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் மேலும் பல்வேறு அரும்பொருட்கள் காட்சிப்படுத்த போதிய இடவசதியின்றி உள்ளது. பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட அரிதான சாமி சிலைகள், உலோகம், ஐம்பொன் போன்ற சிலைகள் சென்னையில் உள்ள தலைமை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட கண்டெடுக்கப்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

போதிய இடவசதியுடன் பொது இடத்தில்

அருங்காட்சியகம் என்பது அந்தந்த மாவட்டத்தின் பழம் பெரும் பொருட்கள், கண்டெக்கப்படும் சிலைகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் அமையும். ஆனால் இதற்கான போதிய இடவசதி இல்லாத நிலையில், கண்டெக்கும் சிலைகள், பொருட்கள் என அனைத்தும் இடம் பெற்றிடும் வகையில் போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆன்மிக சேவகர் கனகசபாபதி:-

திருவாரூர் மாவட்டம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி என்பதால் பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளது. நமது கலாச்சாரம், பண்பாடு பெருமைகள் என பல விவரங்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றால் இன்னும் சிறப்புமிக்கதாகவும், வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் வசதியாக அமையும்,

சிரமங்கள்

ஆனால் அன்றைய காலத்தில் இடவசதி கிடைக்காததால் அருங்காட்சியகம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. கோவில்

மண்டபத்தை பாதியாக பிரித்து தான் அருங்காட்சியகம் செயல்படுகிறது. ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் அருங்காட்சியகம் என்பது ஏற்புதடைதல்ல. கோவில் வளாகம் என்பதால் ஒரு தரப்பினரும் மட்டுமே வந்து செல்லும் இடமாக இருந்து வருகிறது. இதனால் மற்ற மதத்தினரும் வந்து அருங்காட்சியகத்தை பார்வையிடுவதில் சிரமங்கள் உள்ளன.

அனைவரும் பயன்பெற முடியும்

தற்போது திருவாரூர் அருங்காட்சியகம் என்பது இருப்பதே தெரியாத அளவில் இருந்து வருகிறது. பிரமாண்டாக அமைய வேண்டிய அருங்காட்சியகம், திருவாரூரில் இடவசதியின்றி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. எனவே பணிகளை துரிதப்படுத்தி போதிய இடவசதியுடன் பொது இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் அனைத்து தரப்பினரும் பயன் பெற முடியும் என்றார்.

மேலும் செய்திகள்