திருவண்ணாமலை
தென்னிந்தியாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முதலிடம் வகிக்கிறது
|மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியதில் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முதலிடம் வகிக்கிறது என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறினார்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏ.டி.ஐ.பி. திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும், அலிம்கோ நிறுவனமும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
முன்னதாக சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசுகையில்,
தென்னிந்திய அளவில் 6 மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிகமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 2700 பேருக்கு மருத்துவ உபகரணங்கள் ரூ.3 கோடியில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியதில் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி முதலிடம் வகிக்கிறது என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணிகலைமணி, பரிமளாகலையசரன், தமயந்திஏழுமலை, அன்பரசிராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி நன்றி கூறினார்.