< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

தினத்தந்தி
|
21 Nov 2023 6:02 PM IST

கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 26-ந் தேதி மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது.

இந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.26.11.2023 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

பக்தர்கள் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்