< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்; காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்; காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

தினத்தந்தி
|
19 Nov 2022 7:53 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந்தேதி தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் மலையை சுற்றி நடந்து கிரிவலம் செல்வார்கள். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை திபம் முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களை எவ்வாறு அனுமதிப்பது, போக்குவரத்து மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்