< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு

தினத்தந்தி
|
29 Oct 2022 10:57 AM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கலந்துகொண்டு பேசியதாவது,

"கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை.

பெல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோவில் இணையதளத்தில் வெளியிடப்படும். தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும். பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும்.

கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.

தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி, தீபத் திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்"

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்