திருவள்ளூர்-திருப்பதி சாலையை 4 வழிப்பாதையாக விரிவுப்படுத்த வேண்டும் - மத்திய மந்திரிக்கு ஜி.கே.வாசன் கடிதம்
|திருவள்ளூர்-திருப்பதி சாலையை 4 வழிப்பாதையாக விரிவுப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரிக்கு ஜி.கே.வாசன் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தையும், ஆந்திராவையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக எண்.என்.எச்.- 205 விளங்குகிறது. இதில் தினந்தோறும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பல்லாயிரகணக்கானோர் பயணிக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த திருவள்ளுரில் இருந்து திருத்தணி வழியாக 2013-ம் ஆண்டிலிருந்து இருவழிப்பாதையாகவே விளங்கி வருகிறது.
இந்த சாலையின் நடுவில் தடுப்பு சுவர் இல்லாமல் வாகன ஓட்டிகள், எதிர்நோக்கி வரும் வாகனங்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் வாகன விபத்துகள் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது. இந்த சாலை 32 கி.மீ. தூரமே உள்ளது. இவற்றை 4 வழிப்பாதையாக விரிவுப்படுத்துவதால் பல்லாயிரகணக்கானோர் பயன்பெறுவர்.
வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி, புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் 4 வழிப்பாதையைப்போல திருவள்ளுரில் இருந்து திருப்பதி செல்லும் சாலையை விரிவுப்படுத்தவேண்டும். இதனால் பாதுகாப்பான பயணம் ஏற்படும். அதோடு பயண நேரமும் குறையும். ஆகவே விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.