< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை

தினத்தந்தி
|
16 Aug 2023 2:20 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளூர்,

சுதந்திர தின விழாவையொட்டி திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து வானில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த 420 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை உபயோகிப்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆயிரம் மஞ்சப்பைகளை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவி்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவள்ளூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திர ஷா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்