திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடியில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி - 3 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரி தகவல்
|திருத்தணி முருகன் கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3 மாதங்களில் நிறைவடையும் என கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக தங்கத்தேர், வெள்ளித்தேர் இருந்தன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன. இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதேபோல் வெள்ளித்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் செய்து தருவதாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோவில் நிர்வாகத்திடம் கடந்தாண்டு கோரிக்கை வைத்தார். கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியதை அடுத்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யும் பணிகள் மலைக்கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. மரத்தேர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி நன்கொடை வழங்கிய தொழிலதிபர் கோவில் துணை ஆணையர் விஜயாவிடம் மரத்தேரினை ஒப்படைத்தார்.
இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்க அனுமதி வழங்குமாறு முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்து அறநிலைத்துறை ஆணையர் அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் மரத்தேரில் 539 கிலோ எடையுள்ள வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, வேலூர் துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர் ரமணி, கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் வெள்ளி தகடுகளின் எடை சரிபார்க்கப்பட்டு பணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வெள்ளி தகடுகள் ரூ.4 கோடி மதிப்புடையது. 3 மாதங்களுக்குள் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளி தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.