திருப்பூர்: பேக்கரியில் வாங்கிய சாக்லேட்டில் புழு நெளிந்ததால் பரபரப்பு...!
|அங்கேரிபாளையம் அருகே பேக்கரியில் வாங்கிய சாக்லேட்டில் புழு நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேனியேல். இவர் இன்று மாலை அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் குடோன் அருகே உள்ள ஒரு பேக்கரியில் 5 ரூபாய் சாக்லேட் 2 வாங்கினார். அதில் ஒன்றை சாப்பிட்ட அவர், 2-வது சாக்லேட்டை சாப்பிட்ட போது, நாக்கில் ஏதோ ஒன்று நெளிவது போன்று இருந்துள்ளது.
இதையடுத்து வாயில் இருந்த சாக்லேட்டை அவசர, அவசரமாக வெளியே எடுத்து பார்த்தார். அப்போது அந்த சாக்லேட்டில் ஒரு பெரிய புழு ஒன்று உயிருடன் நெளிந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டேனியேல் கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த கடையில் ஆயிரக்கணக்கில் சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. ஆனால் அது காலாவதியானவையா? என்பது தெரியவில்லை.
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் இதுபோன்று புழுக்கள் இருந்தாலோ அல்லது காலாவதியாகி இருந்தாலோ பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதுடன், சம்பந்தப்பட்ட கடையில் காலாவதியான பொருட்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.