திருப்பூர்: டீ கடைக்குள் லாரி புகுந்து விபத்து - 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
|ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.
இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீ கடைக்குள் லாரி புகுந்து 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.