< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது
மாநில செய்திகள்

திருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது

தினத்தந்தி
|
31 July 2023 2:55 PM IST

திருப்பூரில் துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் ஹஜ் மந்த்சிங் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள் ஹஜ் மந்த்சிங்கை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி கடையில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளை நடந்த கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கேட்பாரற்று நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசின் கணவர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் தனித்தனியாக பிரிந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் போலீசின் கணவர் சக்திவேல், அழகர் உள்ளிட்ட 2 பேரை சிவகங்கையில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் ஏற்கனவே இதுபோன்று பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் வழிப்பறி வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்