< Back
மாநில செய்திகள்
திருப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் அதிரடி கைது
மாநில செய்திகள்

திருப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் அதிரடி கைது

தினத்தந்தி
|
21 Sept 2024 3:58 PM IST

திருப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடும் பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வீடுகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களான சிவகுரு (35), ராஜா (40), சுரேஷ் (34), தங்கராஜ் (55) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 32 பவுன் நகைகள், 2 பைக்குகள், 1 கார் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்