திருப்பூர்: தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்
|திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருப்பூர்,
திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும் குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி, சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை, அரியாகவுண்டன்பட்டி வெள்ளி கொலுசு பொது வசதி மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நலத்திட்டங்களை வழங்கி முதல்-அமைச்சர் விழா பேரூரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். பாதுகாப்பு நலன் கருதி நேற்று, இன்று ஆகிய 2 நாட்கள் மாநகர பகுதியில் பட்டாசு வெடிக்கவும், பலூன்கள், ஆளில்லா விமானம் பறக்கவும் தடை விதித்து சிவப்பு மண்டலமாக மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.