< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: வேலைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் மாயம்
மாநில செய்திகள்

திருப்பூர்: வேலைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் மாயம்

தினத்தந்தி
|
16 July 2024 6:21 AM IST

சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 மாணவிகள் மாயமாகியுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே சாமளாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவிகள் 2 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து சமீபத்தில் மறு தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. இதே போல் 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இதில் 10-ம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் சகோதரிகள் ஆவார்கள்.

இந்த நிலையில் மாணவிகளின் பெற்றோர் நேற்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் மாணவிகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் என்ன செய்வது என்று அறியாமல் உறவினர்களின் வீடுகள், தோழிகளின் வீடுகளுக்கு சென்று உள்ளார்களா? என்று விசாரித்தனர். அப்போது அவர்கள் அங்கும் செல்லவில்லை என்று தெரியவந்தது.

இதற்கிடையில் மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் "நான், தங்கை, என் பிரண்ட் மூவரும் சென்னைக்கு போகிறோம்.எங்களை தேட வேண்டாம்" என அதில் எழுதப்பட்டிருந்தது.

மற்றொரு மாணவி வீட்டில் எழுதி வைத்த கடிதத்தில் " எல்லோரும் மன்னிக்கவும், நான் சென்னைக்கு வேலைக்கு போறேன். உங்ககிட்ட சொன்னா விடமாட்டீங்க. பிரண்ட் கூட வர்ராங்க. துணிக்கடையில் வேலை. ரூ.3,500 சம்பளம். தேடி அலைய வேண்டாம். நானே வந்திருவேன். சின்ன புள்ளைய (சகோதரி) கூட்டீட்டு போறேன். ஸ்கூல் போகமாட்டாள். எங்கூட வந்தா அவளும் வேலை கத்துக்குவா. தீபாவளிக்கு வந்துருவேன். அப்படியே பால்டெக்னிக் படிக்கிறேன். யாரும் தேட வேண்டாம்.எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க" இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

இதையடுத்து மங்கலம் போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் மொத்தம் 3 பேர் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்