< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதிய கார் - 4 பேர் பலி
மாநில செய்திகள்

திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதிய கார் - 4 பேர் பலி

தினத்தந்தி
|
4 Aug 2022 8:09 PM IST

காங்கேயம் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கேயம்,

திருப்பூரில் இருந்து பழனி நோக்கி இன்று மாலை தனியார் பஸ் ஒன்று தாராபுரம் வழியாக சென்றது. இந்த பஸ் சுமார் 3.45 மணியளவில் திருப்பூர்-தாராபுரம் சாலையில் சக்திவிநாயகபுரம் பகுதியில் வந்த போது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை, சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதியது. பின்னர், எதிரே வந்த பஸ் மீது வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், காரின் இன்ஜின் தனியாக கழன்று பல அடி தூரத்தில் போய் விழுந்தது. இதேபோன்று பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது.

இந்த கோர விபத்தில் காரில் வந்த 6 பேரில் வீரக்குமார்(32), முருகேசன்(31), சஜித்(33) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இருந்த மகேஷ்குமார்(34), கிஷோர் குமார்(35), வெற்றிச்செல்வம்(38) ஆகிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் படுயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வெற்றிச்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

விபத்தில் இறந்தவர்களின் 3 பேரின் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவரின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த ஊதியூர் போலீசார் சாலையில் சிதறி கிடந்த வாகனங்களின் பாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்