< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்: ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
மாநில செய்திகள்

திருப்பத்தூர்: ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
20 Dec 2022 8:41 AM IST

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஜே.சி.பி. வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்