< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.!
மாநில செய்திகள்

திருப்பத்தூர்: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.!

தினத்தந்தி
|
11 Nov 2023 9:43 AM IST

விபத்தில் காயம் அடைந்தவர்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அதிகாலையில் அரசு சொகுசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்