சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்; திரளான பக்தர்கள் தரிசனம்
|இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கப்பட உள்ள திருக்குடைகள் சென்னையில் இருந்து நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
வெண்பட்டு குடைகள் ஊர்வலம்
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் தமிழக பக்தர்களின் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, 11 வெண்பட்டு குடைகளை ஏழுமலையானுக்கு கடந்த 18 ஆண்டுகளாக சமர்ப்பித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடைகள் உபய உற்சவம் தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நேற்று தொடங்கியது.
நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வரவேற்று பேசினார்.
விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர மடாதிபதி ஸ்ரீ ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி அருளாசி வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிசத், தமிழ்நாடு நிறுவனரும், இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் கிரிஜா சேஷாத்ரி மற்றும் கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் பேசினர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர்ரெட்டி கலந்து கொண்டார். திருமலை-திருப்பதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சிறுவாபுரி முருகன் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பக்தர்கள் கூட்டம்
தொடர்ந்து சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 11 வெண்பட்டு குடைகளும் ஊர்வலமாக மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக பூக்கடை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் 11 குடைகள் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. இவைதவிர பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேச பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்தன. ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
திருமலையில் சமர்ப்பணம்
பிற்பகல் 12.30 மணிக்கு பைராகி மடத்துக்கு குடைகள் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடத்தை அடைந்தது. தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை வழியாக ஊர்வலமாக குடைகள் கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியெல்லாம் பக்தர்கள் குடும்பத்துடன், திருக்குடைகளை தரிசித்து, அவற்றின் மீது பூக்களையும், மாலைகளையும் வீசி வணங்கி, பிரார்த்தனை செய்தனர். வால்டாக்ஸ் சாலை வழியாக இரவு திருக்குடைகள் கவுனி தாண்டின.
தொடர்ந்து வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி வழியாக திருவள்ளூர் சென்று அங்கிருந்து திருப்பாச்சூர் வழியாக திச்சானூர் சென்றடைகிறது. வருகிற 30-ந் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர் முன்னிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.