மதுரை
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
|திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பரங்குன்றம்,
நவராத்திரி திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்கள் கோவர்த்தனாம்பிகைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக "வில் அம்பு எய்தல்" நேற்று இரவு நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமியின் திருக்கரத்தில் வேலுடன் வெள்ளியிலான வில் அம்பு சாத்துப்படி செய்து தீபாராதனை நடந்தது.
தங்க குதிரையில் புறப்பாடு
இதனையடுத்து முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வில், அம்பு ஏந்தியபடி தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பசுமலையில் உள்ள அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றார். அங்கு வில் அம்புக்கு சகலபூஜை நடந்தது. இதனையடுத்து முருகப்பெருமான் தங்ககுதிரையில் அமர்ந்தபடியே வில் அம்பு எய்தல் மண்டபத்தினை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து 4 திசையிலும் எட்டு திக்குமாக முருகப்பெருமான் வில் அம்பு எய்தார். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று விஜயதசமி விழா நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மன் வைகை ஆற்றுக்கு எழுந்தருளி அங்கு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஜெனகநாராயண பெருமாள் கோவில், திரவுபதி அம்மன் கோவில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் கோவில், கீழ மட்டையான் பாலகுருநாதர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.