< Back
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரசாதமாக லட்டு,புளியோதரை,பொங்கல்- 11-ந்தேதியில் இருந்து வழங்கப்படுகிறது
மதுரை
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் கோவிலில் பிரசாதமாக லட்டு,புளியோதரை,பொங்கல்- 11-ந்தேதியில் இருந்து வழங்கப்படுகிறது

தினத்தந்தி
|
6 Aug 2023 3:38 AM IST

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் பக்தர்களுக்கு நாள்தோறும் லட்டு, புளியோதரை, பொங்கல் பிரசாதமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் பக்தர்களுக்கு நாள்தோறும் லட்டு, புளியோதரை, பொங்கல் பிரசாதமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

அன்னதானம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேருமாக சேர்த்து தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு தினமும் பிரசாதம்

இந்தநிலையில் கோவில் நிர்வாகம், அய்யப்ப சேவா சங்கத்துடன் முதல்முறையாக கடந்த ஆண்டில் சுமார் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதேபோல வருகிற ஆண்டிலும் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோர் ஆலோசனைபடி இந்த கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் நாள் தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்குகிறது. பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், லட்டு என்று பலவிதமான பிரசாதம் தயார் செய்து வழங்கப்பட உள்ளது. ரூ.1¼ கோடியில் தனி சமையல் அறை, சமையல் பாத்திரங்கள், மற்றும் பிரசாதம் வழங்க கூடிய கப்புகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்