நெல்லையில் வெள்ள நிவாரண நிதி - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
|குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நெல்லை,
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டு, பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார். அதன்படி, வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது.