< Back
மாநில செய்திகள்
திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில்  காய்கறி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை
மதுரை
மாநில செய்திகள்

திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை

தினத்தந்தி
|
6 Sep 2023 9:33 PM GMT

திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் காய்கறி விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் காய்கறி விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் காய்கறி விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.

விலை வீழ்ச்சி

திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் வெண்டை, முருங்கை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கிழவனேரி அம்மாபட்டி, தங்களாசேரி, காண்டை, செங்கப்படை, சிவரகோட்டை போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது காய்கறி அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெண்டைக்காய் விலை கிலோ 20 ரூபாய் வரை விற்பனையானது.

தற்போது கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் முருங்கைக்காய் கிலோ 30 ரூபாய் விற்பனையானது. தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விவசாயிகள் காய்கறிகள் பயிரிட்டு பூச்சி நோய் தாக்குதல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை கடந்து அறுவடை செய்யும் பொழுது காய்கறி விலை குறைந்து விடுகிறது. இதனால் விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது.

அரசு விற்பனை கூடங்கள்

இதுகுறித்து நடுவகோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகுமலை கூறியதாவது, ஒரு கிலோ வெண்டை விதை ரூ.6000-க்கு வாங்கி அதனை நடவு செய்து, களை எடுத்து, உரம் இட்டு, இறுதியாக காய்கறியை பறிப்பதற்கு கூலி ஆட்களை வைத்து பறித்து மார்க்கெட்டுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் உள்ளது. இங்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் போது கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் வெண்டைக்காய் பயிரிட சாகுபடி செலவு 30 ஆயிரம் ரூபாய். தற்போது விற்பனை விலை செலவு செய்ததற்கு பாதிகூட வருவதில்லை.

தானியங்களை விற்பனை கூடங்கள் மூலம் விற்பனை செய்வது போல், காய்கறிகளுக்கும் தனியாக விற்பனை கூடம் அமைத்து அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றார்.

விலை உயர்ந்தால் எதிர்ப்பு

சில நேரங்களில் காய்கறி விலை உயர்ந்தால் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து காய்கறி விலைகளை குறைப்பதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது. விவசாயிகளின் காய்கறி தானியங்கள் மட்டும்தான் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கூடினால் மீண்டும் குறைவது கிடையாது. விவசாயிகளின் காய்கறி பொருட்களுக்கு மட்டும் உடனடியாக குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனை செய்யும் அரசு குறைந்தபட்ச விலையை ஏன் நிர்ணயம் செய்வதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்