புதுக்கோட்டை
சாந்தநாத சாமி கோவிலில் திருக்கல்யாணம்
|புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாந்தநாத சாமி கோவில்
புதுக்கோட்டை நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற சாந்தநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வரும் முதல் பிரதோஷ நிகழ்ச்சியின் போது நந்தி பகவான் தண்ணீரில் சூழ்ந்து இருக்கும்படி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பூஜையானது மழை வேண்டிய வழிபாடு ஆகும். இதேபோல் இந்த ஆண்டும் பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு தண்ணீர் சூழ சிறப்பு பூஜை நடைபெற்றது. 3 நாட்கள் அந்த தண்ணீர் நந்திபகவானை சூழ்ந்திருந்தது. இந்த பூஜைக்கு பின் வருணபகவானின் அருளால் சிறிது மழையும் பெய்தது. இது பக்தர்களின் வழிபாட்டின் மேல் கூடுதல் ஐதீக நம்பிக்கையை ஏற்படுத்தியது.
திருக்கல்யாணம்
இதேபோல் கோவிலில் ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்னி நட்சத்திரம் நேற்று நிறைவடைந்த நிலையில் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். மேலும் புதுக்கோட்டை அய்யர்குளக்கரையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக திருமண வைபவ சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர். பெருமாள் தனது தங்கை வேதநாயகியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கும் வைபம் போல் நடைபெற்றது. மேலும் பெருமாள், அம்பாளுடன் எழுந்தருளினார். பின்னர் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது.
கோவில் சிறப்பு...
பொதுவாக சிவன் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிவபெருமான், அம்பாள் மட்டுமே எழுந்தருளி காட்சியளிப்பது உண்டு. பெருமாள் எழுந்தருள்வது இல்லையெனவும், புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் மட்டும் தான் பெருமாள் தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரை வார்த்து கொடுப்பது போலவும், அவரும் எழுந்தருளி சேவை அளிப்பதும் இக்கோவிலின் சிறப்பு என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.