தஞ்சாவூர்
சிவன்-பார்வதி தேவிக்கு திருக்கல்யாணம்
|தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் பார்வதி சிவன்-பார்வதி தேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
தஞ்சை வடக்குவீதியில் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இது அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்கல்யாணம் நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்கள் தடைபெற்ற திருமணங்கள் சக்கரத்தாழ்வார் அருளால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் பார்வதிதேவி மற்றும் கங்கா தேவி சமேதராக சிவேந்திரர் காட்சி தருகிறார். இங்கு சிவபெருமான் லிங்கம் வடிவில் இல்லாமல் உருவ வடிவில் சிவேந்திரராக காட்சி தருகிறார். இங்கு பிரதோஷம் வழிபாடு மிகவும் பிரசித்திபெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பார்வதி தேவி சமேத சிவேந்திரசாமிக்கு திருக்கல்யாணம் நேற்றுமாலை நடந்தது. இதையொட்டி நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் எடுத்து வந்தனர்.பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
திருமண சம்பிரதாயங்களை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பார்வதிதேவிக்கும், சிவேந்திரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.