< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரம்: மேலும் ஒரு இடைத்தரகர் கைது
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரம்: மேலும் ஒரு இடைத்தரகர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 8:22 AM IST

திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்- நாகஜோதி தம்பதிக்கு கடந்த 12-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேசிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்தார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டாக்டர் அனுராதாவிற்கு திருச்செங்கோட்டில் 2 கிளினிக்குகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்புக்கு வந்த பெண்ணை அனுராதா மூளைச்சலவை செய்து அவருடைய கிளினிக்கிலேயே குழந்தை பெற்றெடுக்க வைத்து அதனை விற்று ரூ.3 லட்சம் பெற்றார். மேலும் டாக்டர், புரோக்கர் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் பெற்று கொண்டு ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் நிறைய புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். குமாரபாளையத்தைச் சேர்ந்த இடைத்தரகர் பாலாமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்