< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா - சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா - சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா

தினத்தந்தி
|
24 Aug 2022 1:37 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழா 8-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.10 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை நிற கடைசல் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

திருவிழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்