திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்
|திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாரானை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தேரோட்டம்
பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரை காலை 7.05 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்த தேர் காலை 7.40 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் காலை 7.50 மணிக்கு தொடங்கியது. 'மாலை முரசு' தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், இயக்குனர் இரா.கதிரேசன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.
விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்
தொடர்ந்து அங்கு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெரிய தேரானது காலை 9.25 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.
பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரை காலை 9.35 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் காலை 10.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
திரளான பக்தர்கள்
விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் கணேசன், தாசில்தார் சுவாமிநாதன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
விழாவையொட்டி திருச்செந்தூர் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டு இருந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவசுப்பு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று, தெப்பத் திருவிழா
11-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.