< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா: யானை மீது கொடிப்பட்டம் வீதிஉலா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா: யானை மீது கொடிப்பட்டம் வீதிஉலா

தினத்தந்தி
|
3 Sep 2023 6:45 PM GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது.

கொடிப்பட்டம் வீதி உலா

பின்னர் கொடிப்பட்டத்தை ஆண்டி சுப்பிரமணியன் அய்யர் கையில் ஏந்தியவாறு, கோவில் தெய்வானை யானை மீது அமர்ந்தவாறு, எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவிலுக்கு சென்றார்.

விழாவில் கோவில் பேஸ்கார் ரமேஷ், 14-ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்