தூத்துக்குடி
திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
|திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி வளாத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெனி அமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் பாரதிராஜா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் கலந்து கொண்டு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். மேலும் பிளஸ்-2 பொது தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றதுடன், வேதியியல் மற்றும் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற செல்வ சதீசுக்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜெசி பொன்ராணி பரிசு வழங்கினார். 2-ம் இடம் பெற்றதுடன், வரலாறு மற்றும் கணக்குபதிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஆனந்த கார்த்திக்கு ஆசிரியர் பாரதிராஜா பரிசு வழங்கினார். 3-ம் இடம் பெற்றதுடன், வரலாறு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற சக்திகுமாருக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், செந்தூர் நண்பர்கள் குழுவை சேர்ந்த செந்தில்வேல், கார்க்கி மற்றும் வேல் ராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் எப்ரேம் நன்றி கூறினார்.