< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  த்தில் ரூ.34½ கோடியில் புதிய தொழில் நுட்ப மையம் திறப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் த்தில் ரூ.34½ கோடியில் புதிய தொழில் நுட்ப மையம் திறப்பு

தினத்தந்தி
|
13 July 2023 6:45 PM GMT

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34½ கோடியில் புதிய தொழில் நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்ப மையத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய தொழில்நுட்ப மையம்

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப மையம் (4.0) அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்ப மையத்தில் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சிஎன்சி மிஷனிங் டெக்னீசியன், பேசிக் டிசைனர் அண்டு விருச்சுவல் வெரிபையர் மற்றும் மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிகிள் என 5 பிரிவுகள் உள்ளன. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நிலையத்தில் திறக்கப்பட்ட புதிய தொழில் நுட்ப மையத்தினை பார்வையிட்டனர்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், திருச்செந்தூர் யூனியன் ஆணையர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, தி.மு.க. வர்த்தகரணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வீ.ராயன், வார்டு உறுப்பினர் கேடிசி முருகன், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகலாபுரம்

இதேபோன்று, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப மையம் திறப்புவிழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அந்த மையத்தை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து கல்லூரியில் நடந்த விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஏஞ்சல் விஜயநிா்மலா தலைமை தாங்கி புதிதாக திறக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப பயிற்சி கருவிகள் குறித்து விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தீவனபயிர் உற்பத்தி திட்டம்

தொடர்ந்து திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தலை பகுதியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகியவை இணைந்து கால்நடை தீவனபயிர் உற்பத்தி திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டி, கால்நடை தீவனங்களுக்கான செடிகளின் விதைகளை விதைத்தார்.

அதேபோல், திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தின் மறுகால் ஓடையை சீரமைக்க ரூ.37 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்ட மதிப்பீடு பணியையும் கனிமொழி எம்.பி. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், கால்நடைத் துறை மாவட்ட இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் செல்வக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் கிளாஸ்டன், உதவி செயற் பொறியாளர்கள் நடராஜன், செவ்வேல், திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையாளர் (பொறுப்பு) கமலா, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்