பெரம்பலூர்
டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
|கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் டி.சி.சி. யூனிட் பிரிவில் வேலை பார்க்கும் தொழிலாளர் நல சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பணிகளை புறக்கணித்து நுழைவு வாயில் அருகே அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் அவர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் தொடர்ந்தது.
அப்போது அவர்கள் 3½ ஆண்டுகளாக பயிற்சி முடித்த தொழிலாளருக்கு வழங்கும் நிரந்தர தொழிலாளர் ஆணையை வழங்காமல் காலதாமதம் செய்வதையும், குறைந்த செயல்பாடு கொண்ட தொழிலாளர்களை திடீரென்று பணியில் இருந்து நிறுத்தம் செய்வதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏற்கனவே அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் தொழிற்சாலை நிர்வாகமும், தொழிலாளர் நல ஆணைய அலுவலர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.