< Back
மாநில செய்திகள்
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்

தினத்தந்தி
|
19 May 2023 1:00 AM IST

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதை காணமுடிகிறது. தரைக்கடை வியாபாரிகள் குடை பிடித்தப்படியே வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஜூஸ் கடைகளில் கூட்டம்

வெயில் கொடுமையை சமாளிக்க பலர் காலை, மாலை வேளைகளில் நீச்சல் குளங்கள், நீர் நிலைகளில் குளியல் போடுகின்றனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக ஏற்படுவதால் குளிர்ந்த பானங்களை பருக விரும்புகிறார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, நீர்மோர், குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கோடை மழை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் சுந்தர் நகரை சேர்ந்த வெங்கடாசலம்:- கோடை காலம் தொடங்கும் முன்னே பெரம்பலூரில் வெயில் வாட்டி வதைத்தது. வெயில் காலம் தொடங்கிய போது அவ்வவ்போது கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து மீண்டும் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வெயிலினால் தாகம் ஏற்படுவதால் தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை மட்டுமே அதிகமாக பருக முடிகிறது. இருசக்கர வாகனத்தில் செல்ல முடிவதில்லை. அந்த அளவுக்கு அனல் காற்றும் வீசுகிறது. சாலையில் கானல் நீர் காட்சியளிக்கிறது. தினமும் காலை, மாலை 2 வேளைகள் குளிக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் தான் கோடை வெயில் பயங்கரமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பெங்களூரு சென்று வந்தேன். அங்கு இவ்வளவு வெயில் இல்லை. பகல் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் வீட்டில் இருக்க முடியவில்லை. வியர்வையால் குளித்து விடுகிறோம். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. மழை பொழியுமா? என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்

வேப்பந்தட்டையை சேர்ந்த மகேந்திரன்:- தற்போது வெயில் 100 டிகிரியை தாண்டி அடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வாரம் 2 நாள் நல்லெண்ணெய் தேய்த்து ½ மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் உணவு முறைகளில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். அதாவது பழங்காலத்தில் சாப்பிட்டது போல் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் உள்ளிட்ட கூழ் ஆகாரங்களை மோர் சேர்த்து அதிகளவில் உட்கொள்ள வேண்டும். மேலும் இளநீர், நுங்கு மற்றும் பழ ஜூஸ் வகைகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வெயில் காலங்களில் அசைவ உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் வெயில் காலங்களில் அம்மை போன்ற நோய் தாக்காமல் வாழலாம்.

வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி தோல் நோய் துறை இணை பேராசிரியர் டாக்டர் கயல்விழி மணி:- கோடை வெயில் அதிகரித்து வருவதால் அவசிய காரணங்கள் தவிர்த்து, மக்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முக்கிய காரணங்களுக்காக வெளியே பயணிக்கும்போது பாட்டிலில் குடிநீர் எடுத்துச்செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற மிருதுவான, தளர்ந்த காற்றோட்ட பருத்தி ஆடைகளை அணிவதோடு திறந்த வெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

கடினமான வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் அதிகம் உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலை சுற்றல் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனே வெப்பம் குறைந்த, குளிர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும். மயக்கம், உடற்சோர்வு, அதிகளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி வந்தால் அருகே உள்ளவரை உதவிக்கு அழைப்பதோடு, மயக்கம் இருந்தால் 108 ஆம்புலன்சையும் அழைக்கலாம்.

அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்

மேலும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புற ஊதாக்கதிர்கள் மற்றும் வெயில் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது குடை பிடித்து சருமத்தை பாதுகாக்கலாம். வியர்வை அதிகமாக வெளியேறும் போது, உடலில் நீர்சத்து குறைவதுடன், உடலில் உள்ள தாதுஉப்புக்களும் குறையும். சாதாரணமாக வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக 1 லிட்டர் நீர் வெளியேறினால், கோடைகாலத்தில் இதன் அளவு அதிகமாக இருக்கும். வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிறுநீர் பிரியும் அளவு குறைந்து நீர்கடுப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் வழக்கத்தை விட அதிகமாக நீர் அருந்த வேண்டும். அத்துடன் நீர்சத்து அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகலாம். வெள்ளரிக்காய், தர்பூசணி, முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக காரசாரமான உணவு வகைகளை விட்டு விடலாம். சிலருக்கு வியர்க்குரு, வேனீர்கட்டி உருவாகும். இவற்றை தடுக்க குளிர்ந்த நீரில் காலை, மதியம், மாலை என்று குளிக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் வேனீர்கட்டிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அம்மைநோய் பாதிப்பு

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ்:- கோடை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையாக விளங்குவது அம்மை நோயாகும். நோயாளியின் அம்மை கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய் கிருமிகள் இருக்கும். நோயாளி இருமும் போதும், தும்மும் போதும் காற்றில் பரவுவதாலும், அவர்களின் உடைமைகளை கையாள்வதின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்கு பரவும். இதனால்தான் அம்மை நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தது. இப்பொழுதும் கடைபிடிப்பது.

அம்மை நோயில், பெரியம்மை, சிறியம்மை, பூட்டுத் தாளம்மை, தட்டம்மை என பல வகைகள் உண்டு. பொதுவாக அனைத்து வகை அம்மை நோய்களிலும், ஜுரம், உடல்வலி, தலைவலி, உடல் சோர்வு, உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல், பின் உடலில் ஆங்காங்கு சிறு கொப்புளங்கள் ஏற்படும். ஏழாம் நாளில் ஜுரம் முழுவதும் நீங்கி கொப்புளங்கள் சுருங்கி, பின் அவை உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இருப்பினும் அம்மைநோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், இதய தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை இது உண்டாக்கலாம்.

துரித உணவு

அம்மைநோய் வராமல் தடுக்க மலக்கட்டு கூடாது. இரவில் கண் விழித்தலை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கை உந்தல்களை அடக்க கூடாது. நல்லெண்ணெய் எண்ணெய் குளியல் வாரம் இருமுறை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வெட்டிவேர், தர்ப்பைபுல், கோரைப்புல், பாய்களை விரிப்புகளாக பயன்படுத்தலாம். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

காட்டன் துணியை உடுத்த வேண்டும். இரவில் தளர்ந்து ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இருக்கும் அறை தூங்கும் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். அதிக காரம் அதிக புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். மண்பானையில் தண்ணீர் வைத்து குடிக்கவும். துரித உணவு, பதப்படுத்தி பாக்கெட் மற்றும் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்து பழச்சாறு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மது புகையை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்