சென்னை
டயர் வெடித்ததால் விபத்து கன்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதல்; டிரைவர் உடல் நசுங்கி சாவு
|டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
மீஞ்சூரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் ஆவடியை அடுத்த மோரை பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் டிப்பர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
டிப்பர் லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் சத்தியவேடு ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு (வயது 47), அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இடிபாட்டுக்குள் சிக்கிய டிரைவரின் உடலை செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி மீட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான வெங்கடேஸ்வரலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.