மெரினா கடற்கரையில் நேரக்கட்டுப்பாடு; மக்களை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
|மெரினா செல்பவர்களை காவல்துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், வெப்பத்தைத் தணிக்க மெரினா கடற்கரையில் கூடும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி போலீசார் அப்புறப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள் 24 மணி நேரம் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தனது பொதுநல மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மெரினா செல்பவர்களை காவல்துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பி விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.