தேனி
மானாவாரி நிலங்களில் உழவு பணி தீவிரம்
|ஆண்டிப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மானாவாரி நிலங்களில் விவசாயிகள் உழவு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
மானாவாரி பயிர்கள்
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலங்களில் மானாவாரி பயிர்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், பருத்தி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை காலத்தை கணக்கில் கொண்டு விவசாயிகள் நிலத்தை உழுது தயார் செய்து வைப்பதுடன், பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்வார்கள்.
அதன்படி, தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த மே மாதம் ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது விவசாயத்திற்கு தயார்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பயிர்கள் சாகுபடி செய்யப்படவில்லை.
உழவு பணி தீவிரம்
இந்தநிலையில் தற்போது ஆண்டிப்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் அதிகமான ஈரப்பதம் உருவாகியுள்ளது. இதையொட்டி மானாவாரி பயிர்களை பயிரிடும் வகையில் மீண்டும் நிலத்தை உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்றும், இயல்பான அளவு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் தங்களது நிலத்தை டிராக்டர்கள் மூலமும், மாடுகளை ஏர்பூட்டியும் உழுது தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.