< Back
மாநில செய்திகள்
டிக்-டாக் பெண் பிரபலம் கொலை: கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மாநில செய்திகள்

டிக்-டாக் பெண் பிரபலம் கொலை: கணவர் பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
8 Nov 2022 9:28 PM GMT

டிக்-டாக் பெண் பிரபலம் கொலை தொடர்பாக கைதான அவரது கணவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (35). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. சமூக வலைதளமான டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ பதிவு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக சித்ரா இருந்தார். மனைவியின் நடவடிக்கை பிடிக்காததால் அமிர்தலிங்கம் அவரை கண்டித்தார். இது தொடர்பாக கடந்த 6-ந்தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அமிர்தலிங்கம் தனது மனைவியை கழுத்தை இறுக்கிக்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தலிங்கத்தை கைது செய்தனர்.

நேற்று இந்த கொலை தொடர்பாக போலீசில் அமிர்தலிங்கம் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை

எனது மனைவி கடந்த 3 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதை அதிக ஆர்வத்துடன் செய்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இது எனக்கு பிடிக்கவில்லை. எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவள் கேட்கவில்லை. அவளது நடனத்தை ஏராளமானோர் லைக் செய்ததால் தொடர்ந்து புது, புது வீடியோக்களை பதிவேற்றம் செய்தாள். இதனால் அவளுக்கு சென்னையில் உள்ள ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சித்ராவை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை செல்வதாக கூறினாள். நாங்கள் வேண்டாம் என்றோம். அதையும் மீறி சென்னைக்கு சென்றாள். இதனால் எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் தங்கினார்

எங்களது எதிர்ப்பை மீறி சென்னை சென்று சில மாதங்கள் தங்கினாள். மகள்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தன்னுடன் இருக்குமாறு பலமுறை அறிவுறுத்தினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சென்னையில் இருந்து திருப்பூர் வரவழைத்தேன். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை செல்வதாக என்னிடம் தெரிவித்தாள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். ஆனால் சென்னையில் இருந்து எனது மனைவியின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

கழுத்தை இறுக்கி கொன்றேன்

இதையடுத்து சென்னை செல்லப்போவதாக கடந்த 6-ந்தேதி சித்ரா என்னிடம் கூறினாள். நான் வேண்டாம் என்றேன். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடுமையான வார்த்தைகளால் திட்டினேன். அப்போது அவள் என்னை தாக்க முயற்சி செய்தாள். அதனால் தான் ஆத்திரம் தாங்க முடியாமல் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

இவ்வாறு அமிர்தலிங்கம் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்