< Back
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
12 Sept 2023 10:28 AM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்தது. இந்தநிலையில் உயர்த்தபட்ட கட்டணத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழமை வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பூங்காவின் வளர்ச்சிக்காக நுழைவு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது.

கட்டண உயர்வு

அதன்படி ரூபாய் 115-லிருந்து நுழைவு கட்டணத்தை 200 ஆக உயர்த்தியது. மேலும் பூங்காவில் பேட்டரி வாகனம், வீடியோ கேமரா உள்ளிட்ட கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. கடந்த 9-ந்தேதி சனிக்கிழமை புதிதாக உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணம் பூங்காவில் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று வெளி மாவட்டங்களில் இருந்து பூங்காவை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் நுழைய கட்டணம் 200 ரூபாய் என்று ஊழியர்கள் தெரிவித்தவுடன் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறி்யதாவது:-

குறைக்க வேண்டும்

ஏற்கனவே பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.90 மற்றும் அதனுடன் சேர்த்து செல்போன் கேமரா கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 115 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. தற்போது நுழைவு கட்டணம் மட்டுமே 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர ஏழை, எளிய மக்களை பெரிதும் இக்கட்டணம் பாதிக்கப்படுகிறது.

நடுத்தர மக்களின் குறைந்த செலவில் சுற்றி பார்க்கும் சுற்றுலா தலமாக விளங்கிய வண்டலூர் உயிரியல் பூங்கா தற்போது நடுத்தர மக்களும் சுற்றி பார்க்க முடியாத அளவிற்கு கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்