பாசஞ்சர் ரெயில்களில் மீண்டும் பழைய கட்டணம் - பயணிகள் மகிழ்ச்சி
|கொரோனா காலத்தில் சிறப்பு விரைவு ரெயில்கள் என பெயர் மாற்றி அறிவிக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பின் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய அரசு ரெயில் கட்டணத்தை உயர்த்தியது. அதாவது பாசஞ்சர் ரெயில்களை சிறப்பு விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றிய மத்திய அரசு சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பாசஞ்சர் ரெயில்களில் பயணித்து வந்தனர்.
கொரோனா தொற்றுக்காலத்தில் பாசஞ்சர் ரெயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னும் பாசஞ்சர் ரெயில்களின் கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் குறைக்கவே இல்லை. இதனால் பொதுமக்கள், ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால், மத்திய அரசும்,ரெயில்வேயும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையே பாசஞ்சர் ரெயில்களிலும் வசூலித்து வந்தன. இதன் காரணமாக அன்றாடம் பாசஞ்சர் ரெயில்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது ரெயில்வே நிர்வாகம் நேற்று பாசஞ்சர் ரெயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவித்து யு.டி.எஸ். செயலியிலும் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் சாதாரண பாசஞ்சர் ரெயில்களின் கட்டணம் முன்பு இருந்த நிலைக்கு குறைந்து உள்ளது. ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரெயிலில் செல்லும் ஊழியர்கள், மாணவ மாணவிகள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழைய பாசஞ்சர் ரெயில் கட்டண விகிதத்தையே மக்கள் மறந்துபோய் இருந்த நிலையில், அது மீண்டும் அமலுக்கு வந்து இருப்பதை பார்த்து பேருந்துகளை விட குறைவான கட்டணமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
200 கி.மீட்டருக்கும் குறைவான தொலைவு செல்லும் ரெயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கான ரெயில் கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.35 ஆக குறைந்துள்ளது.