< Back
மாநில செய்திகள்
டிக்-டாக் பெண் பிரபலம் கழுத்தை இறுக்கி படுகொலை: கணவர் வெறிச்செயல்
மாநில செய்திகள்

டிக்-டாக் பெண் பிரபலம் கழுத்தை இறுக்கி படுகொலை: கணவர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
8 Nov 2022 3:11 AM IST

சினிமா ஆசையில் வேறொருவருடன் சென்னைக்கு வந்ததால் டிக்-டாக்கில் பிரபலமான திருப்பூரை சேர்ந்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவர் அந்த பகுதியில் உள்ள வேறு ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி திருப்பூரில் கணவருடன் வசித்து வருகிறார்.

சித்ராவுக்கு சமூக வலைத்தளங்கள் மீது தீராத மோகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் அதிக ஆர்வமாக இருந்தார். தினம், தினம் புதுப்புது வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் இவரது வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் சித்ரா வீடியோ பதிவிடுவதை அமிர்தலிங்கம் விரும்பவில்லை. இதனால் மனைவியை பலமுறை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் கணவர் சொல்லை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை.

சினிமா வாய்ப்பு தேடி சென்னை பயணம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்-டாக் மூலம் சித்ராவுக்கு, ஆண் நண்பர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் சித்ராவை சினிமாவில் எப்படியும் நடிக்க வைத்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமாவில் நடிக்கும் கனவும், அந்த வாய்ப்பு தற்போது கைகூடி வந்து இருப்பதாகவும், இதனால் சென்னை செல்ல உள்ளதாகவும் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு கணவரின் பேச்சைக்கேட்காமல் அவரது சொல்லை மீறி தனக்கு அறிமுகமான ஆண் நண்பருடன் சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சில மாத காலம் சென்னையில் இருந்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு வந்து கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் சித்ரா மீண்டும் சென்னைக்கு சினிமாவில் நடிக்க செல்வதாக தனது கணவரிடம் கூறினார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தி சித்ராவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சித்ரா வீட்டுக்கு வந்ததும் மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அமிர்தலிங்கம் துப்பட்டாவால் சித்ராவை கழுத்தை இறுக்கினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தலிங்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்