தஞ்சாவூர்
வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் மழை
|தஞ்சை பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
தஞ்சை பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தஞ்சையில் கோடை காலம் முதல் தற்போது வரை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது.
இரவு நேரங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழையின்றி காணப்பட்ட நிலையில் பகலில் வெயில் அனல்காற்றுடன் பொதுமக்களை சுட்டெரித்தது.
இடி, மின்னலுடன் மழை
குறிப்பாக நேற்று பகல் நேரத்தில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த வெப்பத்தின் காரணமாக இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் லேசான தூறல்களுடன் மழை பெய்தது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த திடீர் மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை பொதுமக்கள் மட்டுமின்றி தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.