திருச்சி
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (21). இவர்கள் 2 பேரும் தள்ளுவண்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக பொன்மலை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் சக்திவேல் மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் சக்திவேல் ஜாமீனில் வெளியே வந்தால் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
விபத்துகளில் 2 பேர் பலி
*துவாக்குடி அருகே உள்ள காந்தளூர் ஊராட்சி கள்ளர் தெருவை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் தவமணி(34). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். சூரியூர் பிரிவு சாலையில் வந்தபோது, எதிரே வந்த கார், மொபட் மீது மோதியதில் படுகாயமடைந்த தவமணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து கார் டிரைவர் விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த தீபக் ஸ்ரீ பால்(35) என்பவரை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.
*வளநாடு அருகே உள்ள கிழக்கு பழுவஞ்சியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 35). இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கைகாட்டி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி மீது புகார்
*மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும், பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியதாகவும், எனவே அவர்களை பேச வைத்து ரசித்த எடப்பாடி பழனிசாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், பாடல் பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறையை சேர்ந்த வக்கீல் முரளிகிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.