அரியலூர்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தாமரைக்குளம்:
போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் அன்பரசு(வயது 21). இவர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி அன்பரசுவை கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி நடத்திய விசாரணையில், அன்பரசு ஏற்கனவே இதேபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு, அவர் மீது தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திலும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
எனவே அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் சுமதி கேட்டுக்கொண்டதன்படி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அன்பரசுவை குண்டர் தடுப்பு சட்டத்தின்படி தடுப்புக்காவலில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அன்பரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உத்தரவு நகல்கள் திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.