< Back
மாநில செய்திகள்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
31 July 2023 2:21 AM IST

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பணம் பறிப்பு

திருச்சி கீழரண்சாலை வடக்கு தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் மணிமண்டப சாலை பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி காலை இவர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் அவரிடம் கத்தியை காட்டி ரூ.1,000 கேட்டு மிரட்டினர்.

அவர் கொடுக்க மறுத்ததால், அவருடைய சட்டை பையில் இருந்து ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

4 வாலிபர்கள் கைது

விசாரணையில், நெடுஞ்செழியனிடம் பணத்தை பறித்து சென்றது திருச்சி எடத்தெருவை சேர்ந்த அன்சாரி (24), ஆரோக்கியராஜ் (20), பிரசன்னா (21), அரியமங்கலம் எஸ்.ஐ.டியை சேர்ந்த முகமது ஆசிக் (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் அன்சாரி, தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர் என்பதும், காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் அடி, தடி, வழிப்பறி, போன்ற 8 வழக்குகளும், பாலக்கரை போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் போதை மாத்திரை விற்பனை, வழிப்பறி ஆகிய 2 வழக்குகள் என்று 12 வழக்குகளும் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதனால் அன்சாரி ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், அவருடைய தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் கொடுங்குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை கொடுத்தார். அதன்பேரில், அன்சாரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்