அரியலூர்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை கிராமம் பூக்கார தெருவை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் சிம்சோன்(வயது 28). இவர் புதுக்கோட்டை கொள்ளிடம் ஆற்றங்கரை அருகில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுக் கொண்டிருந்தபோது, கடந்த 16.5.2023 அன்று போலீசாரால் பிடிக்கப்பட்டார். இவர் மீது திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது மது விற்றது தொடர்பான வழக்கும், கொள்ளை வழக்கு ஒன்றும், கொலை முயற்சி வழக்கு ஒன்றும், நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு ஒன்றும் திருமானூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. எனவே இவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயலெட்சுமி அறிக்கையின்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதை ஏற்று சிம்சோனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதையடுத்து சிம்சோன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் மத்திய சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.