< Back
மாநில செய்திகள்
மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை
அரியலூர்
மாநில செய்திகள்

மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை

தினத்தந்தி
|
26 May 2023 11:06 PM IST

விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்து கருத்துகளை தெரிவித்தனர். இதில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் செந்துறை முதல் அணைக்கரை வரை முதல்-அமைச்சர் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் சாலை விரிவாக்கத்திற்கு எந்த இடையூறும் இல்லாத 130 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆலமரத்தை அகற்றக்கூடாது என பசுமைத் தாயகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காட்டு ராஜா அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அப்போது பசுமைத்தாயகம் மாநில துணைச்செயலாளர் ராஜேஷ் வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

6 ஆண்டுகளுக்கான பயிர் நஷ்டஈடு

அரியலூர் மாவட்டம் மணப்பத்தூர் ஊராட்சி சித்துடையார் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், சித்துடையார் மணப்பத்தூர் கிராம சாலையில் பட்டா நிலத்திற்கு செல்லும் வண்டி பாதையை மறித்து சட்டவிரோதமாக சாலை அமைத்து கல்வெர்டு அமைத்து 6 ஆண்டுகளாக பட்டா நிலத்திற்கு செல்ல முடியவில்லை. விவசாயம் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் உத்தரவிட்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 31.07.2017 முதல் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், இணை இயக்குனர், திட்ட இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்கள் நிலங்களுக்கு கனரக வாகனங்கள் சென்று வர போர்க்கால அடிப்படையில் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். 6 ஆண்டுகளாக எங்கள் நிலங்களில் பயிர் செய்ய விடாமல் தடுத்ததற்காக 6 ஆண்டுகளுக்கான பயிர் நஷ்டஈடு தர வேண்டும். 6 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாததால் கருவேல மரங்கள் வளர்ந்து விட்டன. அவற்றை அகற்றுவதற்கு உண்டான செலவையும் வழங்க வேண்டும். இனியும் தாமதித்தால் கல்வெட்டு சுவரை நாங்களே இடிப்போம் என தெரிவித்துள்ளனர்.

முந்திரி பயிருக்கு காப்பீடு

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த அரியலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், பொதுப்பணித்துறை மற்றும் சிறுபாசன ஏரிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடி மராமத்து பணிகள் நடைபெறவில்லை. பருவமழை தொடங்கும் முன் பணிகளை தொடங்க வேண்டும். தேசிய ஊரக வேலை ஆட்களை வைத்து வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், விவசாயியின் ஆதார் அட்டைக்கு விதை நெல் 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி ஆதார் அட்டைக்கு 100 கிலோ விதை நெல் வழங்க வேண்டும். நெல், உளுந்து பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் பேசுகையில், வேளாண்மை துறை மூலம் மானிய திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்ததாக உள்ளன என்றும், வெளி மார்க்கெட் விலையுடன் ஒப்பிடும் போது மதிப்பு குறைவாக உள்ளதாகவும் விவசாயிகள் நினைக்கிறார்கள். இதனை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

விவசாயி செங்கமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை. முறையாக வழங்கினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். சுக்கிரன் ஏரியில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கிராம கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட பொருட்களை தேவைப்படும் நேரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளித்தனர். அரியலூர் நகராட்சி சார்பில் பதிலளிக்க உரிய அதிகாரிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்