செங்கல்பட்டு
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
|கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மாமியார் வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற தம்பதி
செங்கல்பட்டு மாவட்டம் பட்டரகரணை அடுத்துள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு 1¼ வயதில் ஆண் குழந்தை இருந்தது. தனசேகரன் தனது மனைவி, குழந்தையுடன் வாரம்தோறும் வேலை விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சென்னை கொசப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். பவித்ரா கொசப்பேட்டையில் வாரம் ஒரு முறை புடவை, சுடிதார், நைட்டி போன்ற பெண்களுக்கு தேவையான ஆடைகளை வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கொசப்பேட்டைக்கு தனசேகரன் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கார் மோதி 3 பேரும் பலி
பின்னர் நேற்று மதியம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருப்பி கொண்டு இருந்தார். அப்போது கோவளம் பஸ் நிலையம் அருகே மாமல்லபுரம் மார்க்கமாக கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தனசேகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தனசேகரன், அவரது மனைவி பவித்ரா, 1¼ வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் தனசேகரன், பவித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். குழந்தை உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
டிரைவர் கைது
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாபுவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிர் இழந்த 3 பேரின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.